சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஆத்தூர், தம்மம்பட்டி, கரியகோவில், எடப்பாடி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழையாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாநகரில் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, லைன்மேடு, அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 39.4, ஏற்காடு 30, வாழப்பாடி 16.6, ஆனைமடுவு 58, ஆத்தூர் 46, கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 55, ஏத்தாப்பூர் 20, கரியகோவில் 40, வீரகனூர் 29, நத்தக்கரை 27, சங்ககிரி 4.3, எடப்பாடி 30.6, ஓமலூர் 18, டேனீஸ்பேட்டை 23 மி.மீ. மழையும் மாவட்டம் முழுவதும் 566.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சந்திரசேகரபுரம், குருசாமிபாளையம், புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி, முத்துக்காளிப்பட்டி, ஆண்டகளூர் கேட், மங்களபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழையாக கொட்டியது. இந்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது.
கனமழை காரணமாக வயல்களிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகர பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை அதிகாலை வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் தவித்தனர்.
எருமப்பட்டியில் 60 மி.மீ., குமாரபாளையம் 34.2, மங்களபுரம் 18.4, மோகனூர் 29, நாமக்கல் 118, பரமத்தி 7, புதுச்சத்திரம் 82, சேந்தமங்கலம் 51, திருச்செங்கோடு 10, கலெக்டர் அலுவலகம் 39.2, கொல்லி மலை 56 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 624.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.