சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது

 ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.

கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அரச்சலூரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48) என்பவர் கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ஆச்சியப்பனை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆச்சியப்பன் கொடுத்த தகவலின் பெயரில் அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் போலீசார் 3 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்படை போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் மூவர் மீதும் சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி உட்பட போலீஸ் நிலையங்களில் 19-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தோட்டத்து வீட்டில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று முதலில் தேங்காய் பறிப்பது போல் நோட்டமிட்டு அவர்களிடம் பேசி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதேபோன்று தான் சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் சிறு கத்திகளை கொண்டு காது, கைகளை வெட்டி நகைகளை திருடி சென்றுள்ளனர். மேகரையான் தோட்டத்தில் மண்வெட்டி கத்திகளை வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 4-வது நபராக நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் கொள்ளையடிக்கும் நகைகளை ஞானசேகரன் கடையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 4 பேர் இன்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form