உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 47 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நகரின் 12 இடங்களை ட்ரோன்கள் தாக்கின. தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.
இரவு முழுவதும் ரஷ்யா 183 வெடிக்கும் டிரோன்களை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில், 77 உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்டன. மேலும் 73 தொலைந்து போயின. ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மூன்று ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"உக்ரைனில் ஒவ்வொரு இரவும் ஒரு கொடுங்கனவாக மாறி, உயிர்களை பலிவாங்குகிறது. உக்ரைனுக்கு பலத்த வான் பாதுகாப்பு தேவை. எங்கள் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளிடமிருந்தும் வலுவான மற்றும் உண்மையான முடிவுகள் தேவை" என்று இன்று அதிகாலையில் X இல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா மேலும் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரஷியாவின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.