சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவில் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டியது அவசியமாயிற்று என்றும் அஜித் தோவல் கூறினார்.
போர் இந்தியாவின் விருப்பம் அல்ல, எந்தவொரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்ததல்ல. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உறுதிபூண்டு, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க எதிர்நோக்குகின்றன" என்று அஜித் தோவல் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை சீனா கண்டிப்பதாகவும், அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் விலகிச் செல்ல முடியாத அண்டை நாடுகள், இரண்டும் சீனாவின் அண்டை நாடுகள்.
போர் இந்தியாவின் தேர்வு அல்ல என்ற உங்கள் கூற்றை சீனா பாராட்டுகிறது. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் வேறுபாடுகளை முறையாகக் கையாளும், நிலைமை மோசமாவதைத் தவிர்க்கும் என்று சீனா மனதார நம்புகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆலோசனைகள் மூலம் விரிவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தை அடைய வேண்டும் என்று சீனா எதிர்பார்க்கிறது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்காகவும், சர்வதேச சமூகத்தின் பொதுவான விருப்பமாகவும் உள்ளது" என வாங் யி, அஜித் தோவலிடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.