26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 10 சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அஜர்பைஜான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கடந்த 10ம் தேதி காலை 4.30 மணி தொழுகைக்கு பிறகு இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா எங்களை தாக்கிவிட்டது.
நீண்டதூர சூப்பர்சோனிக் பிரமோஸ் குரூஸ் வகை ஏவுகணைகளை வைத்து தாக்கியது. ராவல்பிண்டி விமான தளம் உட்பட பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கியது. அதன் பிறகு இது பற்றி எனக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தகவல் சொன்னார்'' என்று தெரிவித்தார்.
பிரமோஸ் என்பது ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்த அதிநவீன ஏவுகணை ஆகும். மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா மொத்தம் 15 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியதாகி கூறப்படுகிறது. Su - 30 MKI போர் விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
ராவல்பிண்டியில் உள்ள நுர்கான் விமான தளம் உட்பட மொத்தம் 11 இடங்கள் இதில் குறிவைக்கப்பட்டன.