நாம் தமிழர் கட்சிக்கு கலப்பை ஏந்திய விவசாயி சின்னம் ஒதுக்கீடு

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

பிறகு கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.

இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form