ராணுவ வீரர்கள் எல்லையில் போய் சண்டையா போட்டாங்க! - செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு

 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .

ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 



Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form