இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை நேற்று மாலை நடந்தது.
அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற டிரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
டிரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் டிரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டதாக பரபரப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் தற்போது பாகிஸ்தான் டிரோன்கள் எதுவும் தாக்கவில்லை என்றும், நிலைமை அமைதியாகவும் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.