மாமல்லபுரம் அருகே வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், ''கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் விதித்து, போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்று கூறினார்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, "ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.