தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
எனவே, 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, கும்பகோணத்தில் இருந்து 145 பஸ்கள், திருச்சி, துறையூர், பெரம்பலூரில் இருந்து 190 பஸ்கள், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து 58 பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து 65 பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 50 பஸ்கள், காரைக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து 48 பஸ்கள், புதுக்கோட்டையில் இருந்து 51 பஸ்கள் என மொத்தம் 607 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.
மேலும், கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.