பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை பலியாகினர். 200 பேர் வரை பணய கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 52,000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பொது ஹமாஸ் இஸ்ரேல் பணய கைதிகள் பலரை விடுவித்தது. 1 மாதத்தில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. இதனால் காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு (காலவரையின்றி) அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது ஹமாஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே போரின் பேரில் காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முழுமையான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் போரின் போர்வையில் நிறுவ முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், ஹமாஸ் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படும் என்றுகூறியுள்ளார்.