26 பொதுமக்கள் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார்.
இதில்," இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பொறுத்து அடுத்த முடிவு இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது, இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது" என்று மோடி பேசினார்.
இந்நிலையில் மோடியின் உரையில் இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மோடியின் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பதவில், "பிரதமர் மோடி தனது 22 நிமிட உரையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது விவாதிக்காத விஷயங்கள் இவைதான்.
▪️அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதாக டிரம்ப் ஏன் திரும்பத் திரும்பக் கூறுகிறார்; இன்று அவர் வர்த்தகத்தை காரணம் காட்டி உங்களை மிரட்டியதாகக் கூடச் சொன்னார். இது உண்மையா?
▪️இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தபோது, நமது ராணுவத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கையால் பாகிஸ்தான் பதறிப்போனதாக நீங்களே சொன்னீர்கள், பிறகு ஏன் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டீர்கள்?
▪️காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லை. அமெரிக்க தலையீட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
▪️இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் சந்திப்பு, பேச்சுவார்த்தை மூன்றாவது நாட்டில் நிகழும் என்ற அமெரிக்க அறிக்கை குறித்தும் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களா? பாகிஸ்தானுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தப் போகிறீர்களா?
▪️பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை நமது இராணுவம் நிச்சயமாக அழித்துவிட்டது. ஆனால் பஹல்காமில் கொடூரமான கொலையைச் செய்த பயங்கரவாதிகள் எங்கே?
▪️முழு நாடும் எதிர்க்கட்சியும் உங்களுடன் இருந்தபோது, நீங்கள் ஏன் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து விரட்டவில்லை?
▪️ 19 நாட்களாக பாகிஸ்தானின் காவலில் இருக்கும் நமது BSF ஜவான் பூர்ணம் சாஹுவை எப்போது திரும்ப அழைத்து வருவோம்?
▪️கடைசியாக ஒரு கேள்வி, பஹல்காமில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு எப்படி ஏற்பட்டது? இதற்கு நீங்க பொறுப்பா அல்லது உள்துறை அமைச்சரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் பிரதமர் உரையில் இடம்பெற்ற மற்ற அனைத்தும் அர்த்தமற்றவை என்றும் தெரிவித்துள்ளார்.