காசாவுக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்

 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. பின்னர் நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. சுமார் 13 மாதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருந்த நிலையில் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 7 வார போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் மனிதாபிமான உதவிப்பொருட்கள் காசாவிற்கு எடுத்துச்செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது.

ஏழு வார போர் நிறுத்தம் நிறைவடைந்ததும் மேற்கொண்டு போர் நிறுத்தம் நீட்டிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. தங்களது பாதுகாப்பு வளையத்தை விரிவுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் எனத் தெரிவித்தது. மேலும் காசா மக்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்தது. மேலும் உதவிப்பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதித்தது. இதனால் காசா மக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர்.

இந்த நிலையில் காசாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மால்டா அரசு தெரிவித்துள்ளது. மால்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் இருந்தனர். அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மால்டா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோன்று காசாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல்- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

Post a Comment

Previous Post Next Post
video/Video

Contact Form