வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் செல்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு பேசிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் துபாயில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தற்போது வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவித்த அறிவிப்பு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த பதவிக்கு இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிஜமான வேலைவாய்ப்பு தான் என்றும், சம்பள விகிதத்தில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை எனவும் நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு துபாய் மற்றும் அபுதாபியை சேர்ந்த 2 வி.ஐ.பி. குடும்பங்களுக்கு ஆகும். இந்த பணியில் சேருபவர்கள் வீட்டு பணியாளர்களை மேற்பார்வையிட வேண்டும். வீட்டு பராமரிப்பு பணிகளை ஒழுங்குபடுத்துதல், செலவு திட்டம் மற்றும் நிதி நிர்வாகம், குடும்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் உயர்தர வீட்டு நிர்வாக அனுபவமுள்ளவர்கள் மற்றும் பல வேலை அழுத்தங்களுக்கு இடையிலும் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் உயர்தர வாழ்க்கைதரம், பணியாளர் மதிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.