அரசியல்வாதிகள் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளில் 98 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது. மீதமுள்ள 2 சதவீதம் இங்கிருந்து வெளியேறி, பாஜக-வின் வாஷிங் மெஷினில் இணைந்தவர்கள் என சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
நேற்று அமலாக்கத்துறை டைரக்டர், பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள்.
அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.7 சதவீதம். இதன் அர்த்தம் ஒவ்வொரு 1000 வழக்குப் பதிவுகளுக்கு வெறும் 7 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆகவே, ஒவ்வொரு 1000 வழக்குகளிலும், 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏனெனில் கடுமையான பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமின் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
இவ்வாறு சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.