டெல்லி மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் தீப்பிடிக்க, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது.
இதனை தொடர்ந்து, மார்ச் மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார் .
பின்னர் அவரது வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளித்தது.
இந்த இரண்டையும் தலைமை நீதிபதி சஞ்சீச் கன்னா ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது ஏன் இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பினார்.
ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய தன்கர், "உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குத் தொடர முன் அனுமதி தேவை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு பணம் கிடைத்த வழி, அதன் நோக்கம், குறிப்பாக இதில் பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.