பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து நேற்று மாவட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அன்புமணி, "ராமதாஸ் எங்கள் குலதெய்வம்" என்று தெரிவித்தார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "ஆகஸ்ட் 10 தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும். இந்த மாநாட்டிற்கு அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள், உங்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று விமர்சனம் வைக்கப்படுகிறேதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "என் பின்புலத்தில் யாரும் இல்லை. என்னை யாரும் இயக்க முடியாது. கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன். பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் செயல்பாட்டைப் பொறுத்து மாற்றினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், பாமகவில் நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால் மட்டுமே நீக்க முடியும் என அன்புமணி கூறியிருந்தது தொடர்பான கேள்விக்கு, "சட்ட விதிகளை பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன். இது ஒவ்வொரு கட்சியிலும், குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது, நாங்களே இதை பெரிது படுத்துவதில்லை" என்று ராமதாஸ் சிரித்துக்கொண்டே பதில் கூறினார்
இதனிடையே அன்புமணியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், "உலகத்தில் அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். அது எப்போது எப்படி நடைபெறும் என சொல்ல முடியாது என்று கூறினார்.
திலகபாமாவை நீக்கியது போல அன்புமணியையும் கட்சியை விட்டு நீக்குவீர்களா? என்று கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்ட ராமதாஸ், அன்புமணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு வரும் வியாக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன் என்று கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்து கொண்டார்.