உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், இதில் அவருக்கு சிறுநீர்ப்பை பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. நான் போதைப் பொருளை பயன்படுத்தியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. மருத்துவர் பரிந்துரையின் பேரில், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, கெட்டமைனை சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தினேன்.
அதை ஏற்கனவே எக்ஸ் தளத்தில் கூறி உள்ளேன். தற்போது அதையும் நான் பயன்படுத்துவது கிடையாது என்றார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார். அந்த பதவியில் இருந்து சமீபத்தில் எலான் மஸ்க் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.