பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பிரிவுகளின் கீழ் சிலரைத் தவிர, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 அன்று ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஜவானை மணந்த பாகிஸ்தானிய பெண்ணான மினல் கான் நாடு கடத்தப்படுகிறார்.
ஜம்முவிலிருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்ல அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கரோட்டாவில் தனது கணவர் முனீர் கான் மற்றும் குழந்தைகளுடன் மினல் கான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜம்முவிலிருந்து வாகா எல்லைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
நாடு கடத்தப்படுவது குறித்து பேசிய மினல் கான், கணவன் மற்றும் குழந்தைகளிடம் இருந்து தன்னை பிரிக்க வேண்டாம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். மேலும் தாக்குதலில் அப்பாவிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மற்றோரு புறம் ஜம்மு காஷ்மீரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில், கான்ஸ்டபிள் முதாசிர் அகமது ஷேக்கின் தாயார் ஷமீமா அக்தரும் ஒருவர்.
கான்ஸ்டபிள் முதாசிர் அகமது, மே 2022 இல் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இரகசியக் குழுவின் ஒரு நடவடிக்கையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது கொல்லப்பட்டார்.
முதாசிருக்கு மரணத்திற்குப் பின் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது, ஷமீமாவும் அவரது கணவரும் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அதைப் பெற்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானியர் என்ற காரணத்தால் ஷமீமா அக்தரும் நாடுகடத்தப்படுகிறார். ஷமீமா அக்தர் காஷ்மீரில் 45 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஆவார். இவர்களை போல பலர் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டு வருவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.