பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகியவை திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், காசாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சகிக்க முடியாதது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கம் இந்த மோசமான நடவடிக்கைகளைத் தொடரும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.
இஸ்ரேல் தனது ராணுவத் தாக்குதலை நிறுத்தி, மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுப்போம். பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவியை இஸ்ரேல் தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் செயலாகும். இஸ்ரேல் உடனடியாக காசாவிற்கு முழுமையாக உதவியை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மனிதாபிமான உதவிகளை, காசாவிற்குள் முழுமையாக அனுமதிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.