ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி காஷ்மீர் மக்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "காஷ்மீரிகள் ரத்தக்களரிக்கு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் நாட்டின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் மீது ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்துறை அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள்.
இருப்பினும், (பஹல்காம்) தாக்குதலுக்குப் பிறகு தனது ரத்தத்தைக் கொடுத்து ஒரு சுற்றுலாப் பயணியைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற காஷ்மீரியை விட்டுவிடுங்கள்.
22ஆம் தேதி தாக்குதலுக்கு முன் அங்குள்ள (பைசாரன்) மக்கள் வாழ்வதற்கு வருவாய் ஈட்டி வந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உணவு வழங்கப்படாமல் மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்னஇது?.
இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும். இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். உங்கள் காயங்களையும் குணப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.