முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிகளின் போது நிகழ்ந்த ஒவ்வொரு தவறுக்கும் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில், ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கலந்துரையாடலில் பங்கேற்ற சீக்கிய இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் 1984ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆபரேஷன் புளுஸ்டாரின் கீழ் பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல நான் இல்லாத (பிறக்காத) போது நடந்தன.
ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 1980களில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன். நான் பலமுறை பொற்கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். சீக்கிய சமூகத்துடன் எனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது.
பாஜக குறித்து சீக்கியர்களிடையே நான் பயத்தை உருவாக்குவதாக நீங்கள் சொன்னீர்கள். சீக்கியர்களை எதுவும் பயமுறுத்தும் என நான் நினைக்கவில்லை. மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்குச் சங்கடமாக இருக்கும் ஒரு இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்றே நான் வினவினேன் என்று தெரிவித்தார்.