மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காரியாலயத்தின் நிலம் உடைக்கப்பட்டு தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து அவரைக் கைது செய்து 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவரது கட்சியின் காரியாலயம் சிஐடி யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது காரியாலயத்தில் இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியேறவே உட் செல்லவே முடியாதபடி அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரியாலயக் கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.