திருவனந்தபுரம்:
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குபருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், வயநாடு, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 6 மடங்கு மழை பொழிந்து உள்ளது.
மழையுடன் சூறைக்காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
அதேபோல் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆயிரக்கணக்கில் சேதம் அடைந்து உள்ளன. இதனால் கேரள மின்சார வாரியத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் கடந்த 8 நாட்களில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு 32 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாட்டில் குளத்தில் மூழ்கி வாலிபர் ஸ்டீவ் (வயது 24), கண்ணூரில் ஆற்றில் மூழ்கி நளினி (52), காயங்குளத்தில் குளத்தில் மூழ்கி பத்மகுமார் (57) ஆகியோர் இறந்தனர்.
மேலும் கொச்சியில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் பலியானார். இவ்வாறு நேற்று ஒரே நாளில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் கேரளாவில் இனி வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் மழையின் பாதிப்பு தமிழ்நாடு, கர்நாடகத்திலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.